மும்பை,
மராட்டிய மாநிலம், நாந்தெட்டில் இருந்து லாத்தூர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. லாத்தூர் அருகே உள்ள அல்கார்வாடி பட்டா அருகே வந்தபோது, திடீரென முன்னால் சென்ற பைக் மீது கன்டெனர் லாரி மோதியதுடன், எதிரே வந்த கார் மீதும் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த அகமதுபூர் பகுதியை சேர்ந்த ஜனார்தன் கல்பா (வயது 60), அவரது மனைவி சவிதா ஜனார்தன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த ஸ்ரேயாஸ் சச்சின் வாக்மரே(17) என்ற சிறுவனும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தான்.
காரில் இருந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.