தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொடூரம்: மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்த தந்தை

தனது இறுதிச் சடங்குகளுக்கான செலவிற்காக ஏடிஎமில் உள்ள பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கடிதம் எழுதியிருந்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த மனைவியின் உடல்நிலையால் மனமுடைந்த தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் அவதி

சித்தூர் மாவட்டம் பங்காரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதர் (32). இவரது மனைவி நிர்மலா (29). இவர்களுக்கு திலீப் (13) என்ற மகனும், ஸ்ரீவித்யா (11) என்ற மகளும் உள்ளனர்.

நிர்மலா கடந்த சில மாதங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தாமோதர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த தாமோதர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சித்தூர் ஊரக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என தாமோதர் குறிப்பிட்டிருந்தார்.

இறுதிச் சடங்கு

மேலும், தனது இறுதிச் சடங்குகளுக்கான செலவிற்காக ஏடிஎம் அட்டைகளில் உள்ள பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.