தேசிய செய்திகள்

கடப்பாவில் பயங்கரம்: பால்கோவாவில் விஷம் கலந்து மனைவியை கொன்ற வாலிபர்

விசாரணையில் மனைவியை கொலை செய்ததை கிரண் ஒப்புக்கொண்டார்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரை சேர்ந்தவர் கிரண். இவரது மனைவி பத்மஜா. பத்மஜா உடல் பருமனாக இருந்ததால் கிரணுக்கு அவரைப் பிடிக்கவில்லை. மேலும், கிரணின் நடத்தை மீது பத்மஜாவுக்கு இருந்த சந்தேகம் காரணமாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த கிரண், தன் மீது சந்தேகம் வராமல் பத்மஜாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, தடையம் இல்லாமல் கொலை செய்வது எப்படி என்று யூடியூபில் பல மணி நேரம் தேடி பார்த்தார். இறுதியில், விஷம் வைத்து கொலை செய்தால் சந்தேகம் வராது என முடிவு செய்தார்.

அதற்காக விஷத்தை ஐதராபாத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் கொடுத்து ஆன்லைன் மூலம் வாங்கினார். அந்த விஷத்தை பால்கோவாவில் கலந்து மனைவிக்கு கொடுத்தார். அதை சாப்பிட்டவுடன் பத்மஜா மயங்கி விழுந்தார். பின்னர் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து துடிதுடிக்க கொலை செய்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த கிரண், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பத்மஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பத்மஜாவின் உடலில் எந்த காயமும் இல்லாததால், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கிரணை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் கிரணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி குண்டாக இருந்த காரணத்தினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT