லிகித் கவுடா 
தேசிய செய்திகள்

நிலத்தகராறில் பயங்கரம்: வீடியோ எடுத்த இளைஞர் சுட்டுக்கொலை

துப்பாக்கியை பறிக்க முயன்ற ஜேசிபி ஓட்டுநர் உட்பட இருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹோஸ்கோட் அருகே, நிலத் தகராறில் நடந்த துப்பாக்கி சூட்டில், செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேசிபி இயந்திரம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகா சோலூர் பகுதியில், அரசு வீட்டு வசதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லும் பாதையை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி நடைபெற்றது.

பயிர்கள் சேதம்

அப்போது, அந்த பகுதியில் ராகி பயிரிட்டிருந்த ரமேஷ் முனியப்பா என்பவர், தனது பயிர்கள் சேதமடைந்ததை கண்டு ஆத்திரமடைந்து பணியைத் தடுத்து நிறுத்தினார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டிற்குள் ஓடிய ரமேஷ் முனியப்பா, தனது உரிமம் பெற்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்து வந்து சரமாரியாக சுட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு

இதில், அங்கு நடந்துகொண்டிருந்த தகராறை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த லிகித் கவுடா என்ற 25 வயது இளைஞரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் படுகாயம்

மேலும், துப்பாக்கியை பறிக்க முயன்ற ஜேசிபி ஓட்டுநர் உட்பட இருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஹோஸ்கோட் போலீசார், துப்பாக்கியால் சுட்ட ரமேஷ் முனியப்பாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT