தேசிய செய்திகள்

தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பொதுநல மனுவாக விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யின் தவெக, சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதனை தொடர்ந்து, கடந்த மாதம் 13-ந் தேதி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் தவெக அரசு 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது.

குதிரை பேரம்

இதற்கிடையே, ஆட்சி அமைப்பதற்காக தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகளும், குதிரை பேர ஊழல்களும் நடந்துள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தர விட வேண்டும். என தெரிவித்து இருந்தார்.

மனு தள்ளுபடி

இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், "எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் தெளிவற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. இதனை பொதுநல மனுவாக விசாரிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.