புதுடெல்லி,
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், கடந்த 1997ஆம் ஆண்டு மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த போது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியபோது அவர் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளது.
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் இன்று 34-வது நாளை எட்டியது. போலீசார் தடியடி நடத்தியபிறகும் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரில் கூட்டம் குறையவில்லை. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்தநிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், கடந்த 1997ஆம் ஆண்டு மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த போது, ஒடிசா தலைமை செயலக வாயிலில், வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையில் ஒடிசாவில் ஜானகி பட்நாயக் தலைமையிலான அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதில், தர்மேந்திர பிரதானும் தாக்கப்பட்டதாக, அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு, தற்போது புவனேஸ்வரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியராக இருக்கும் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த போராட்டம், புவனேஸ்வரத்தில், முதல்-மந்திரி இல்லத்துக்கு மிக அருகே நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என 1500 பேர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஒரு இளைஞர்தான் இன்று மத்திய கல்வி மந்திரியாக இருக்கும் தர்மேந்திர பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மேந்திர பிதான் தன்னுடைய 18 வயதில் மாணவர் அரசியல் அமைப்பில் இணைந்தார், பிறகு படிப்படியாக பல பதவிகளை வகித்து இன்று மத்திய மந்திரியாக பொறுப்பு வகிக்கிறார். உத்கல் பல்கலையில் மானுடவியல் (ஆந்த்ரோபாலஜி) பட்டம் பெற்றவர், ஏபிவிபி அமைப்பின் தேசிய செயலராக 1994 மற்றும் 1997 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.