தேசிய செய்திகள்

பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு? - வெளியான தகவல்

பிப்ரவரி மாதத்தில் வசூலான மொத்த ஜி.எஸ்.டி. வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும். உள்நாட்டு விற்பனை, இறக்குமதி பொருட்கள், சேவைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வருவாய் நாட்டின் பொருளாதார செயல்பாடு, நுகர்வு நிலை மற்றும் வரி சீர்திருத்தங்களின் விளைவுகளை பிரதிபலிக்கிறது.

மத்திய நிதித்துறை அமைச்சகம் வசூலித்து, கணக்கீடு செய்து, வெளியிடும் மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூல் தரவுகள் பொருளாதார வளர்ச்சியின் திசையை காட்டும் முக்கியக் குறியீடாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டில் செப்டம்பர் 22-ந்தேதி ஜி.எஸ்.டி வசூலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான மொத்த ஜி.எஸ்.டி. வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

அதன்படி பிப்ரவரி மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.83 லட்சம் கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு வருவாய் 1.36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது 5.3 சதவீதம் உயர்வாகும்.

இறக்குமதி வருவாய் 47,837 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த மாதத்தை விட 17.2 சதவீதம் அதிகமாகும்.நிகர செஸ் வருவாய் 5,063 கோடி ரூபாய் ஆகியும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது 13,481 கோடி ரூபாயாக இருந்தது.