மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு ரகுசவுகான்(வயது27) என்ற நண்பரின் காதலியான கீதா மாலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மகேஷ், கீதாமாலியை அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். மேலும் அவர், அந்தப்பெண்ணுக்கு பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி கீதாமாலி தனது காதலன் ரகுசவுகானிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ரகுசவுகான் தனது கூட்டாளி ஷியார் மங்ரோலியா(21), காதலி கீதா மாலி ஆகியோர் சேர்ந்து மகேஷை கொலை செய்ய திட்டம் போட்டனர். அதன்படி, பால்கர் மாவட்டம், நைகாவில் உள்ள ஓட்டலுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி இரவு அவர்கள் மகேஷை வரவழைத்தனர். அப்போது அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த ரகுசவுகான் தனது கூட்டாளியுடன் சேர்ந்து மகேஷை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான ரகுசவுகான், காதலி கீதா மாலி, கூட்டாளி ஷியார் மங்ரோலியா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, அவர்கள் குஜராத் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர்.