ஆக்ரா,
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில், ரெயிலின் பொதுப் பெட்டியின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் இருந்து ரத்தம் கசிவதுடன் துர்நாற்றமும் வீசியதாக குவாலியர் ரெயில்வே அதிகாரிகள் அரசு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில் ஆக்ரா கான்ட் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், அரசு ரெயில்வே போலீசாரும் ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் சூட்கேஸை கைப்பற்றி சோதனை செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் மனித உடலின் சில பாகங்கள் இருந்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.மேலும், உடல் பாகங்கள் சென்னை பெயர் அச்சிடப்பட்டிருந்த காகிதத்தில் சுற்றப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக் குழு சென்னை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூட்கேஸ் எந்த ரெயில் நிலையத்தில், யாரால் ரெயிலில் வைக்கப்பட்டது என்பதை கண்டறிய, ரெயில் நின்ற அனைத்து நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.