கோட்டபல்லி,
குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை கட்டையால் தாக்கி, மனைவியின் மூக்கை கடித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மனவேதனையடைந்த மமதா, தனது 2 குழந்தைகளுடன் கோட்டபல்லியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர்களை கூப்பிட்டு வர கோட்டபல்லியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார் மணி சந்தர். ஆனால், மமதா அவருடன் செல்ல மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணி சந்தர், மாமனார் நாராயணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த கட்டையை எடுத்து நாராயணாவின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நாராயணா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
தனது கண் முன்னே தந்தை தாக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மமதா, மணி சந்தரை தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரையும் தாக்கிய மணி சந்தர், மமதாவின் மூக்கை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதற்கிடையே, காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர். அவர்களை கண்டதும் மணி சந்தர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காயமடைந்த நாராயணா மற்றும் மமதாவை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும் பரபரப்பு
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டபல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கணவர் மணி சந்தரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.