ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள துர்கை அம்மன் சிலை 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சுவாமி தயானந்தா இளைஞர் நலச் சங்கம் 9.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் துர்கா சிலையை அலங்கரித்துள்ளது. பூஜை பந்தல்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
100, 200, 500 என பல்வேறு மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு, அம்மன் சிலையும், அதனை சுற்றியுள்ள பின்னணியும் கண்கவர் மாலையாகவும், தோரணங்களாகவும் தொடுக்கப்பட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்க்கும்போது அம்மனே ரூபாய் நோட்டு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல் காட்சியளிக்கிறது. இந்த தனித்துவமான மற்றும் அரிய அலங்காரத்தை காண்பதற்கும், துர்கை அம்மனை தரிசித்து ஆசி பெறுவதற்கும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பந்தலில் குவிந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் இந்த 'ரூபாய் நோட்டு' அலங்கார துர்கை அம்மனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது.