தேசிய செய்திகள்

“த.வெ.க.வின் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை..” - அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான 3-வது ஆட்சிக்காலத்தில் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியினர் நேற்று கொண்டாடினர்.

புதுடெல்லி,

பா.ஜ.க. ஆட்சிக்கட்டிலில் ஏறி 12 ஆண்டுகள் நேற்றோடு நிறைவு பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான 3-வது ஆட்சிக்காலத்தில் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அக்கட்சியினர் நேற்று கொண்டாடினர். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த விழாவையொட்டி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து டெல்லி பாரத் மண்டபத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய தலைவர் நிதின் நபின், பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால ஆட்சி பற்றி பேசினார். அதுகுறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. அவருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிற மந்திரிகள் நிதின் கட்காரி, ஜே.பி.நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினர். அப்போது பல்வேறு தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. குறிப்பாக மேற்கு வங்காள தேர்தல் வெற்றி பலராலும் பேசப்பட்டது. செய்தியாளர்கள் அவரவர் மாநிலங்களின் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டனர். "தமிழகத்தில் த.வெ.க. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று அமித்ஷா கருத்து கூறினார்.

நிதின் நபின் அடுத்த மாதம் தமிழகத்துக்கு வர இருப்பதாகவும், தேர்தல் தோல்வி பற்றி அப்போது ஆராய இருப்பதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது.