தேசிய செய்திகள்

கணவன் வேண்டாம்; கள்ளக்காதலன் தான் வேணும்... அடம்பிடித்த மனைவியால் நடந்த விபரீதம்

முனிராஜூ சுனிதாவை மன்னித்து ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜூ கூலி தொழிலாளி. இவருக்கும் பாகேபள்ளியை சேர்ந்த சுனிதா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி சந்தோஷ மாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முனிராஜூ பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் சுனிதா சமூக வலைதளத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் சுனிதாவுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பழகி வந்தனர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுனிதா, கணவரை விட்டு வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதனால் முனிராஜூ அதிர்ச்சி அடைந்தார். இதனை அறிந்த சுனிதாவின் பெற்றோர், அவரை தேடி கண்டுபிடித்து அறிவுரை கூறினார்கள். மேலும் கணவருடன் சேர்ந்து வாழுமாறும் தெரிவித்தனர். பின்னர் முனிராஜூவுடன் சுனிதாவை அவர்கள் சேர்த்து வைத்தனர். முனிராஜூவும் சுனிதாவை மன்னித்து ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

சுனிதாவின் பெற்றோர் சென்ற பிறகு, மீண்டும் முனிராஜூவுடன் தகராறில் ஈடுபட்ட சுனிதா, கள்ளக்காதலனுடன் செல்வதாக அடம்பிடித்துள்ளார். இதனால் முனிராஜூ மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இரவில் அனைவரும் தூங்கிய பிறகு முனிராஜூ, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் எழுந்து பார்த்தபோது, முனிராஜூ தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் முனிராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடி, சமாதானம் பேசி அழைத்து வந்த நிலையில் மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்ல மனைவி அடம் பிடித்ததால் மனமுடைந்து முனிராஜூ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சுனிதாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.