லக்னோ
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் பெண் ஒருவர் தன்னுடைய சகோதரியின் திருமணம் நடந்ததும் அவருடைய வீட்டுக்கு சென்று துணையாக இருந்திருக்கிறார். அந்த சகோதரியின் கணவர் இந்திய விமான படையில் வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சகோதரியின் கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டார் என அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். எனினும், இந்த குற்றச்சாட்டை குற்றம் சாட்டப்பட்ட நபர் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் போலீசார் தேடுவது தெரிந்ததும் அவர் தப்பியோடி விட்டார். இதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த வழக்கில் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின்போது, நான் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்து கொண்டேன். அப்போது உடல்நலம் இல்லாமல் இருந்தது. நன்றாக தூங்கி விட்டேன். தூக்கத்தில் கனவு வந்தது.
அதில், சகோதரியின் கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்வது போன்று கனவு கண்டேன். போலீசில் புகார் அளிக்கும்போது குழப்பத்தில் இருந்தேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய விமான படை வீரர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதுபற்றி சகோதரி கணவரின் வழக்கறிஞர் கூறும்போது, 7 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடந்து வந்தது. இறுதியாக இந்த வழக்கில் இருந்து குற்றச்சாட்டுக்கு ஆளான, சகோதரியின் கணவரை கோர்ட்டு விடுவித்து உள்ளது.
கோர்ட்டில் அந்த பெண் வாக்குமூலம் மாற்றி கொடுத்ததும், பாலியல் துன்புறுத்தல் செய்வது போன்று கனவு கண்டேன் என கூறியதும், வழக்கில் போதிய சான்றுகள் இல்லாததும், அவர் விடுவிக்கப்பட காரணங்கள் ஆகும் என கூறினார்.