தேசிய செய்திகள்

நரேந்திரா பெயரையே வெறுக்கிறேன்; பாகிஸ்தானிய வீரரின் பேச்சை பிரதமரிடம் பகிர்ந்த இந்திய வீரர்

போட்டியில் 4-1, 3-2 என அடுத்தடுத்து, 2 சுற்றுகளையும் வென்று போட்டியில் வெற்றி பெற்றேன்

புதுடெல்லி

பிரதமருடனான உரையாடலின்போது, நரேந்திரா என்ற பெயரையே நான் வெறுக்கிறேன் என பாகிஸ்தானிய வீரர் கூறிய விசயங்களை இந்திய வீரர் பகிர்ந்து கொண்டார்.

குத்துச்சண்டை வீரர்

காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது அவரிடம், காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றவரான நரேந்தர் பெர்வால் உரையாடினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாக அரசியல் சார்ந்த பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமரிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விசயம் ஒன்றை நரேந்தர் பெர்வால் நினைவுகூர்ந்து பேசினார். அவர் பேசும்போது, பாகிஸ்தானை பற்றி நாம் பேசி கொண்டிருக்கும்போது எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது.

உலக ராணுவ போட்டிகள்

2015-ம் ஆண்டு உலக ராணுவ போட்டிகள் நடந்தன. என்னுடைய முதல் போட்டி பாகிஸ்தானிய குத்துச்சண்டை வீரருக்கு எதிராக இருந்தது. அப்போது அதிகாரிகள் பலர் என்னை தொடர்பு கொண்டு, பாகிஸ்தானிடம் நீ தோற்க கூடாது என்று கூறினர். போட்டியில் 4-1, 3-2 என அடுத்தடுத்து, 2 சுற்றுகளிலும் வெற்றி பெற்றேன். எனினும், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. எங்கள் இருவரையும் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

பாகிஸ்தானிய வீரர்

2014-ம் ஆண்டு முதன்முறையாக நீங்கள் பிரதமரானீர்கள். எங்களுடைய ராணுவ பயிற்சியாளரின் பெயர் நரேந்திர ராணா. இதனை ஒரு நிமிடம் நினைத்து பார்த்து விட்டு, அந்த பாகிஸ்தானிய குத்துச்சண்டை வீரர் என்னை பார்த்து, சகோதரா, நான் ஏதேனும் கூறவா? என்றார். நானோ, கூறுங்கள் என்றேன்.

அதற்கு அவர், உங்களுடைய பெயர் நரேந்திரா, உங்களுடைய பயிற்சியாளரின் பெயர் நரேந்திரா. உங்களுடைய பிரதமரின் பெயர் நரேந்திரா. இந்த நரேந்திரா என்ற பெயரையே நான் வெறுக்க தொடங்கி விட்டேன் என கூறினார். இந்த தகவலை பெர்வால் பகிர்ந்ததும் அதனை கேட்டு பிரதமர் மோடி பலத்த சத்தத்துடன் சிரிப்பை வெளிப்படுத்தினார்.