புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த அவர், அதன்பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார். இதன்மூலம் அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
பிரதமர் மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைவராக பணியாற்றியதை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசு பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இந்நிலையில், அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2001ல் குஜராத் முதல்-மந்திரியாகும்போது இந்த உயரத்துக்கு வருவேன் என நினைக்கவில்லை. நான் இன்னும் மாணவன் தான். கற்றுக்கொண்டே இருக்கிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். ஒவ்வொரு வெற்றி, தோல்வியிலும் பாடம் கற்றுக்கொள்கிறேன்.
இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி என தோல்வி எனக்கு கற்றுக்கொடுக்கிறது. 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு தலைவணங்குகிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். பா.ஜ.க., என்.டி.ஏ. மற்றும் உடன் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கு நன்றி.
140 கோடி மக்களுக்காக இன்று விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். எனக்காகவும் இறைவனிடம் வேண்டினேன். இன்னும் ஆற்றலுடனும், வலிமையுடனும் பணியாற்ற பிரார்த்தனை செய்தேன். இந்த நேரத்தில் இந்திய அரசியலமைப்புக்கும் மரியாதை செலுத்துகிறேன். உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம். 2047ல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம்.
எனக்கு எதையாவது கற்றுக்கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் பணிவைக் கற்றுக்கொடுத்தார்கள். என்னை தாழ்த்தியவர்கள் மீண்டும் எப்படி எழுவது என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். என் ஆதரவாளர்கள் என்னை ஊக்குவித்தார்கள், அதே நேரத்தில் என் விமர்சகர்கள் எனக்குள் பார்க்கக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்குத் துணையாக நின்றவர்கள் நம்பிக்கையின் சக்தியைக் காட்டினார்கள்
ஒவ்வொரு நெருக்கடியும் என் பொறுமையைச் சோதித்தது, ஒவ்வொரு வெற்றியும் என் பொறுப்புகளை விரிவுபடுத்தியது, மேலும் ஒவ்வொரு சாதனையும் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல எனக்கு தைரியத்தையும் உறுதியையும் அளித்தது
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் 2001 புஜ் நிலநடுக்கம் 'மறுநிர்மாணத்தில் உறுதியாக இருக்க எனக்குக் கற்றுக்கொடுத்தது'; சந்திரயான் திட்டம் 'தோல்வியிலிருந்து மீண்டு எழ எனக்குக் கற்றுக்கொடுத்தது'; மற்றும் கோவிட் நெருக்கடி 'தேசத்தின் கூட்டு உணர்வின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது' உள்ளிட்ட, தனது கற்றலுக்குப் பங்களித்த குறிப்பிட்ட நிகழ்வுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். 'இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவங்களுக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்ல' தன்னை ஊக்குவித்த ஊடகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.