பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன்(வயது 52). இவரது மகள் பவானி(வயது 22). இளம்பெண் பவானி, கல்லூரியில் படித்துக் கொண்டே அழகு நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் பவானி தனது தாய்க்கு வாட்ஸ் ஆப் மூலம் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது ஆண் நண்பர் சந்திரசேகர் என்பவருடன் பவானி இருந்துள்ளார். இது குறித்து பவானியின் தாய் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீநிவாசன் உடனடியாக தனது மகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பவானியுடன் புகைப்படத்தில் இருந்த சந்திரசேகரை ஸ்ரீநிவாசனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், அவரது செல்போனுக்கும் ஸ்ரீநிவாசன் தொடர்பு கொண்டுள்ளார்.
முதலில் போனை எடுக்காத சந்திரசேகர், சிறிது நேரம் கழித்து அவரே போன் செய்து பேசியுள்ளார். அப்போது அவர் ஸ்ரீநிவாசனிடம், “உன் மகளை கொன்றுவிட்டேன். உன்னால் முடிந்ததை செய்துகொள்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பயந்துபோன ஸ்ரீநிவாசன், உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பவானி சடலமாக கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.
போலீசார் பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக உள்ள சந்திரசேகரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.