பெங்களூரு,
பெங்களூருவில் வாழ்க்கையை நடத்த மாதம் ரூ.1லட்சம் வேண்டும் என தனியார் நிறுவன பெண் ஊழியரில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெங்க ளூரு முன்னணியில் உள்ளது. பெங்களூருவில் ஏழை,எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் உள்ளனர். மறுபுறம் பெரும் பணக்காரர்களும் வசிக்கிறார்கள். சமீபகாலமாக பெங் களூருவில் அத்தியாவசியமான வீட்டு வாடகை, வாகன கட்ட ணங்கள் என அனைத்தும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் அட்ரியி. அவர் பெங்களூரு வில் வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் குறித்து ஒரு வீடியோவை பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-
பெங்களூருவில் உயர்தரமான குடியிருப்பு கட்டிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்தால் அதன் வாடகை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை உள்ளது. அதை தாண்டி தனி வீடுகளின் வாடகை ரூ.30 ஆயிரம் வரை இருக்கிறது. இங்கு வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தது ரூ.2 கோடி வேண்டும். அதுவே உயர்தரமான பகுதியில் வாங்கினால் வீட்டின் விலை ரூ.4 கோடி வரை வேண்டும்.
பெங்களூருவில் வாழ்க்கையை நடத்த வேண்டுமெனில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1 லட்சம் வேண்டும். ரூ.4 லட்சம் மாதாந்திர வருமானம் கிடைத்தால் ஓரளவுக்கு நன்றாக வாழலாம். அதனால் பெங்களூரு நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வதற்கான நகரம் கிடையாது. அதனால் மாதம் ரூ.1 லட்சத்துக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் பெங்களூருவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். சிலர் கூறிய கருத்தில், புற நகர் பகுதியில் குறைந்த வருவாயிலும் வாழ்க்கையை நடத்த முடியும் என்றும், நல்ல சொகுசு வசதிகள் வேண்டுமெனில் ரூ.1 லட்சம் தேவை என்றும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.