ஷிகர் அகர்வால்- பிரஷாகா மாத்தூர்  
தேசிய செய்திகள்

64 வில்லாக்கள் வாங்கிய ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தம்பதி- லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலைக்கு இந்த சொத்துகள் வாங்கப்பட்டதே சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தம்பதி, தனியார் ரிசார்ட் நிறுவனத்திடமிருந்து 64 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

ராஜஸ்தானில் பல்வேறு முக்கியத் துறைகளில் உயர் பதவிகளை வகித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷிகர் அகர்வால். இவரது மனைவி பிரஷாகா மாத்தூர் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் மற்றும் இவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரில் 'கோயல் பேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் 'அனந்தா' ரிசார்ட்டுகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 64 சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

சொத்துக்களின் விபரங்கள்

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை ராஜஸ்தானின 3 முக்கிய நகரங்களில் இந்த சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:-

• உதய்பூர் (அக்டோபர் 2023): முதல் கட்டமாக 20 காட்டேஜ்கள் வாங்கப்பட்டன.

• அல்வார் (மார்ச் 2026): இரண்டாம் கட்டமாக 20 வில்லாக்கள் பதிவு செய்யப்பட்டன.

• ஜெய்ப்பூர் (அக்டோபர் 2026): மூன்றாம் கட்டமாக 24 வில்லாக்கள் வாங்கப்பட்டன.

சந்தேகத்தை எழுப்பிய விலை- ஒப்பந்தம்

சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலைக்கு இந்த சொத்துகள் வாங்கப்பட்டதே சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, ஜெய்ப்பூரில் ரூ.59 லட்சம் என விளம்பரப்படுத்தப்பட்ட வில்லாக்கள், தலா ரூ.11 லட்சத்திற்கு மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. மேலும், சொத்துகள் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், அவை மீண்டும் அதே நிறுவனத்திடம் நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் வருவாய் பகிர்வு செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை-நடவடிக்கை

கடந்த 2006 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், தங்களது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசு சலுகைகளையும் ஒப்புதல்களையும் வழங்கிவிட்டு, அதற்கு பிரதிபலனாக குறைந்த விலையில் சொத்துகளைப் பெற்றார்களா என்ற கோணத்தில் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதையடுத்து, ஷிகர் அகர்வால் மற்றும் அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகியோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஷிகர் அகர்வால் தாக்கல் செய்த மனுவில், இடைக்காலப் பாதுகாப்பு வழங்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மறுத்து, அடுத்த விசாரணையை வரும் டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

SCROLL FOR NEXT