தேசிய செய்திகள்

வீரர் வீராங்கனைகளுக்கு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பு; வினேஷ் போகத் பரபரப்பு பேட்டி

விளையாட்டு அமைச்சகமோ அல்லது அரசோ இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வினேஷ் போகத் கூறியுள்ளார்.

புதுடெல்லி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். 12 ஆண்டுகளாக அந்த பதவியை வகித்த, முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யான அவருக்கு எதிராக. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத் மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள், கடந்த 2023-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதன்பின்னர், அதே ஆண்டின் ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில், சரண் சிங்குக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு பற்றிய விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த சிறுமி உள்ளிட்ட 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், போகத் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் ஒருவர் என கூறிக்கொள்ள விரும்புகிறேன் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியின்போது, பிரிஜ் பூஷண் இப்போது கூட, மல்யுத்த கூட்டமைப்பை நானே நடத்தி வருகிறேன் என கூறுகிறார். ஒட்டுமொத்த நாட்டின் முன் இதனை கூறுகிறார். ஆனால், விளையாட்டு அமைச்சகமோ அல்லது அரசோ இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் போட்டிக்கு சென்றால், என்னுடன் என் அணியினரும் வருவார்கள். எங்களுடைய நலம் விரும்பிகளும் உடன் வருவார்கள். யாருக்காவது ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டி வரும் என உங்கள் அனைவரிடமும் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன் என்றார்.

பிரிஜ் பூஷண் அளித்த பேட்டியின்போது, அவரே, ஒரு நபரை கொலை செய்துள்ளேன் என கூறியுள்ளார். ஆனால், இன்னும் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை. இதில் இருந்து அவருடைய மனநிலையை பற்றி நீங்கள் யோசித்து தெரிந்து கொள்ளலாம். யாருக்கும், எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். எனக்கு சிறப்பு சலுகைகளோ அல்லது சிறப்பான கவனிப்போ தேவையில்லை.

மேடையில், தடகள வீரர் வீராங்கனைகளின் கடின உழைப்பின் அடிப்படையில், முடிவு கிடைக்க வேண்டும். குண்டர்களால் அல்ல என கூறியுள்ளார்.

இந்த போட்டி தொடரின்போது, அனைத்து விளையாட்டு ரசிக ரசிகைகளும், பல ஆண்டுகளாக விளையாட்டு செய்திகளை சேகரித்து வரும் ஊடகத்தினரும் வர வேண்டும். என்ன உண்மையோ, அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரிய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த போட்டி தொடர், ஜப்பானில் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற முக்கிய ஒன்றாக இருக்கும். போகத், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்கும் திட்டத்துடனும் உள்ளார்.