தேசிய செய்திகள்

ஞானேஷ்குமாரை நீக்கினால் 30 வினாடிகளில் போராட்டம் நிறுத்தம்: ராகுல் காந்தி

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தால் 30 வினாடிகளில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி பிரமாண்ட போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் வணிகம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படலாம் என்று வணிகர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, வணிக மற்றும் தொழில் துறை அமைப்பான சி.டி.ஐ. தலைவர் பிரிஜேஷ் கோயல், போராட்டத்தை நவம்பர் 10-ந்தேதிக்குப் பிறகு நடத்துமாறு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ராகுல் காந்தி பதில்

இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-டெல்லி வணிகர்கள் அனைவருக்கும் கூறிக்கொள்வது என்னவென்றால், உங்கள் கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் குரலுக்கு செவிசாய்க்கிறோம். அரசு மெட்ரோ சேவையை நிறுத்தியது, சாலைகளில் தடுப்புகளை அமைத்தது, தலைநகரையே முடக்கியது.வாக்குகள் திருடப்பட்டால், உங்கள் கடை, சேமிப்பு, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் என எதுவுமே பாதுகாப்பாக இருக்காது.பிரதமர் மோடியிடம், குற்றம்சாட்டப்பட்ட 4-வது நபரான தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குமாறு கூறுங்கள். அவ்வாறு செய்தால், 30 வினாடிகளில் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT