புதுடெல்லி,
காசா, மேற்கு கரையில் முற்றுமுழுதாக சீர்குலையும் நிலையில் உள்ள சுகாதாரத்துறையை காப்பாற்ற, இந்தியாவின் Aarogya Maitri திட்டத்தின் கீழ், அவசரமாக 100 மில்லியன் மதிப்பிலான உதவிகளை வழங்குமாறு இந்தியாவுக்கான பாலஸ்தீனம் தூதரகம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் சுகாதார அமைப்பு ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாகவும், "முழுமையான சரிவின் விளிம்பில்" இருப்பதாகவும் அது வேதனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக என்று இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதரகம் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் இனப்படுகொலை போர், ராணுவ தாக்குதல்கள், மருத்துவ உள்கட்டமைப்புகளின் பேரழிவு, மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடி நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடி விளைவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் சுகாதாரத்துறை பேரழிவுகரமாக சரிந்திருப்பது குறித்து இந்திய குடியரசில் உள்ள பாலஸ்தீன தூதரகம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை காப்பாற்றுவதற்கான சரியான தருணம் இது. இந்தியாவும் இந்திய மக்களும் இல்லையென்றால், வேறு யார்? எங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது.
அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் காசா பகுதிக்கு வெளியே அவசர மருத்துவ வெளியேற்றத்திற்காகத் தொடர்ந்து தவிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO), ஐ.நா., ஐ.நா. நிவாரணப்பணியாளர் விவகாரங்கள் ஆணையம் (UNRWA) மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளின் தரவுகளை மேற்கோள் காட்டி, 12,000 உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைப்பு "முற்றிலும் சீர்குலைந்துவிட்டது". சுத்தமான நீர் பற்றாக்குறை, கழிவுகள் குவிதல் மற்றும் நோய்கள் வேகமாகப் பரவுதல் ஆகியவை காசாவில் உள்ள "பேரழிவு" வாழ்க்கை நிலைமைகளை மேலும் மோசமாக்குகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 'ஆரோக்கிய மைத்ரி' திட்டத்தை அறிவித்தார். அப்போது அவர், இந்த திட்டத்தின் கீழ், இயற்கை பேரிடர்கள் அல்லது மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்படும் எந்தவொரு வளரும் நாட்டிற்கும் இந்தியா அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்கும் என்று உறுதியளித்திருந்தார்.