டெல்லி,
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடினால் மத்திய பாஜக அரசு கவிழும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஆளும் பாஜக அரசின் அடித்தளத்தை எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஆட்டம்காண வைத்துள்ளது. பாஜக அரசு தற்போது பயத்தில் உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விட மிகவும் ஆழமான பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் தீர மத்திய பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்.
கடந்த 3 நாட்கள் நாம் மேற்கொண்டுவரும் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டால் மத்திய பாஜக அரசு நிச்சயம் கவிழும்’ என்றார்.