புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எனக்கு எதிரான ஊழல் வழக்கு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் சதி.
ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வர மோடியும், அமித்ஷாவும் சதித்திட்டம் தீட்டினர். ஆம் ஆத்மி கட்சி மற்றும் எங்கள் அனைவரையும் நேர்மையாளர்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது.
நான் உட்பட கட்சியின் 5 பெரிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உண்மை வெற்றி பெறும் என நாங்கள் நம்பினோம். சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றப்பத்திரிகையில் ஆதாரங்களால் ஆதரிக்கப்படாத பல குறைபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஏனெனில் இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் இருவரைத் தவிர மேலும் 21 பேரை அவர் விடுவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.