புதுடெல்லி,
பல்வகை பிரிவு ஆராய்ச்சி அணுகுமுறை மூலம் சிக்கலான மற்றும் அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் கட்டமைப்புகளுக்குள் அறிவியல் சார்ந்த ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் நோக்கில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திறன் மையங்கள் திட்டத்தின் கீழ், 10 ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி திறன் மையங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இவற்றில் சென்னையில் உள்ள ஐஐடி, கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மையமும் ஒரு நிறுவனத்திற்குள்ளோ அல்லது பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் கீழ் உள்ள பலதரப்பு கல்வி நிறுவனங்கள், பொது நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு இடையேயோ துறை சார்ந்த அல்லது துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த மையங்களுடன் தொடர்புடைய இணை முதன்மை ஆய்வாளர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மாநில பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட 20 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இத்திட்டத்திற்கு கல்வி மற்றும் ஆராயச்சி நிறுவனங்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மொத்தம் 945 பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி திறன் மையங்கள் திட்டம் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ கொள்கையாகக் கொண்டுள்ளது.
நாட்டின் நூற்றாண்டு சுதந்திர விழாவிற்குள் வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய புதுமை கண்டுபிடிப்புடன் கூடிய மற்றும் தற்சார்புடைய நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263076®=3&lang=1