லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு என்.பி.சிங் தலைமையில் போலீசார் நேற்று ஷாம்லியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்து 40 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்புக்கான கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த தொழிற்சாலையை முடக்கி, சீல் வைத்தனர்.
இந்த சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை நடத்தி வந்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு என்.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்த வழக்கில் ஹரூன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.