கடந்த 2008-ம் ஆண்டு ராபர்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், அரியானா மாநிலம் ஷிகோஹ்பூரில் 3.5 ஏக்கர் நிலத்தை ஓம்காரேஸ்வர் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இதே நிலம் டி.எல்.எப். நிறுவனத்துக்கு ரூ.58 கோடிக்கு கைமாற்றப்பட்டது. ஆனால் இந்த பரிமாற்றம் சட்டவிரோதமாக இருந்ததாக கூறி, நிலப்பதிவை பதிவுத்துறை ரத்து செய்தது.
இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நேரில் ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து ராபர்ட் வதேரா இன்று ஆஜரானார். நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவருக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. வழக்கின் விசாரணை ஜூலை 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
இந்த வழக்கில் கைதாவதில் இருந்து ஜாமீன் கிடைத்த பிறகு ராபர்ட் வதேரா நிருபர்களிடம் கூறியதாவது:-
“நான் எதற்கும் அஞ்சாதவன். நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை இயங்குகிறது என்பதையும், அரசின் வழிகாட்டுதல்களின்படியே அது தொடர்ந்து செயல்படும் என்பதையும் நான் அறிவேன்.நான் இங்கேயே இருக்கிறேன். மறைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். சட்டரீதியான நடைமுறைகள் எதுவாக இருந்தாலும், நான் முழுமையாக சந்திப்பேன்.மக்கள் தொடர்ந்து எங்களது குடும்பத்தையே விரும்பும்போது, நான் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை எதிர்கொள்ளும் ஆற்றல் என்னிடம் உள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.”
இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.