புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறி வித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “மதுரைக்கு அதிகளவில் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்வதை உறுதிப்படுத்த, வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கான இருதரப்பு சேவைகள் ஒப்பந்தத்தின் கீழ், மதுரை சர்வதேச விமான நிலையத்தையும், ஒரு முக்கிய முனையமாக சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? அவ்வாறு செய்தால், தமிழகத்தின் தென் பகுதிகளில் சுற்றுலா, ரெயில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்” என்று கூறினார்.
அதற்கு சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு பதில் அளித்தார். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாகவே மதுரை சர்வதேச விமான நிலையம் அமைவற்கு ஒப்புதல் அளிக்க முடிந்தது. இதன்மூலமாக மதுரை மக்களின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றி உள்ளோம். மதுரையை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றியதால் ஒருவர் அனைத்து இமிகிரேஷன் (குடிவரவு) சோதனைகளையும் மதுரையிலேயே முடித்துவிட்டு விமானத்தில் ஏறலாம். விமான நிலையத்துக்கு உள்ளேயே பயணத்தை இடைநிறுத்தி, சர்வதேச இணைப்புக்கும் உள்நாட்டு நகரங்களுக்கும் செல்லலாம். இது மதுரை மக்களுக்கு வழங்கும் மற்றொரு வசதி ஆகும்” என்று ராம் மோகன் நாயுடு கூறினார்.