தேசிய செய்திகள்

மும்பையில் கனமழை எதிரொலி: 6 விமானங்கள் ரத்து

மும்பையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த மாதம் 23-ந் தேதி பருவ மழை தொடங்கியது. இதில் கடந்த 4 நாட்களாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் 5-வது நாளாக இன்றும் மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

ரெட் அலர்ட்

இந்தசூழலில், மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் மிக, மிக பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது

விமானங்கள் ரத்து

இந்நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருவதை அடுத்து 6 ஆகாஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி மும்பை, சென்னை, அந்தமான் இடையே இயக்கப்படும் ஆகாஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆகாஷ் ஏர்வேஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மும்பை, டெல்லி மற்றும் கோவா ஆகிய இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, எங்கள் விமானச் சேவைகளில் சிலவற்றில் தாமதம் ஏற்படலாம்.

இதனால் உங்கள் பயணத் திட்டங்களில் சிரமம் ஏற்படக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, உங்கள் பொறுமையையும் புரிதலையும் கோருகிறோம். இச்சூழ்நிலை எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றாலும், உங்களுக்கு உதவ எங்கள் குழுவினர் எப்போதும் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், உங்கள் விமானத்தின் தற்போதைய நிலையை http://bit.ly/qpfltsts என்ற இணையதளத்தில் சரிபார்க்கவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.