புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து 18-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய அரசு முன் மொழியும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய சட்ட துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர், 2023 நாரி சக்தி வந்தன் அதினியம் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவையில் பேசும்போது, இந்த மசோதா பற்றிய விவாதம் இன்று காலை நடந்தது. பல உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பினர். அந்த விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் விரிவான மற்றும் துல்லிய தகவலை இந்த அவையில் வழங்குவோம். அதனால், அந்த விசயத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.
நாட்டின் வாழ்வில் சில முக்கிய தருணங்கள் வந்துள்ளன. இந்த நேரத்தில், சமூகத்தின் மனநிலை மற்றும் தலைமைத்துவத்தின் திறன் ஆகிவை அந்த தருணத்தை பிடித்து, அதனை நாட்டின் ஒரு சொத்தாக உருமாற்றி உள்ளது.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு வலிமையான மரபை உருவாக்கி உள்ளது என்று கூறினார். தேச கட்டமைப்புக்கான பணியில் நாட்டிலுள்ள 50 சதவீதம் பேர் பங்கு கொள்வதற்கான முக்கிய தருணம் இது என மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து அவர், தெற்கோ, வடக்கோ, மேற்கோ, கிழக்கோ நாட்டில் யாருக்கும் இந்த மசோதா தீங்கு விளைவிக்காது. அதற்கான உறுதிமொழி வேண்டும் என்றால், அதனையும் தருகிறேன். தமிழில் இதற்கு ஏதேனும் வார்த்தைகள் இருந்தாலும் சொல்லுங்கள் அதனையும் பயன்படுத்தி தான் இந்த அவையில் பேசுகிறேன் என்றார்.
பஞ்சாயத்து தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிப்போர் 33 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்? பெண்களுக்கான உரிமையை நாம் ஏன் தடுத்து வைக்க வேண்டும்? அதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் முடிவை எந்த எதிர்க்கட்சியும் எடுத்து விடக்கூடாது என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்ய வேண்டும் என விரும்பினாலும், அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது, கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது? என யோசித்து கொள்ளுங்கள். உங்களுடைய தோல்விகளிலிருந்து உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் இந்த முடிவை நீங்கள் ஆதரிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி அல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் இந்தியாவிற்கான புதிய பாதை திறக்கப்பட உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் கூட சில கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த மசோதாவை எதிர்ப்போரை காலம் மன்னிக்காது. பெண்களுக்கான அதிகாரத்தை சிலர் தடுக்க நினைக்கின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
25-30 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் இந்த சிந்தனை வந்தபோதே, அதன் தேவையை உணர்ந்தபோதே, அதனை செயல்படுத்தி இருக்க வேண்டும். தற்போது, இதனை பக்குவப்பட்ட நிலையில் நாம் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். தேவைக்கேற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப அது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஜனநாயகத்தின் அழகு அது என்றார்.
நம்முடையது ஜனநாயகத்தின் அன்னை. ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய ஜனநாயகம் வளர்ச்சி பயணத்தில் உள்ளது. இந்த வளர்ச்சி பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் அற்புத சந்தர்ப்பம் இந்த அவையில் உள்ள நம் அனைவருக்கும் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.