தேசிய செய்திகள்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு லாட்டரி விற்பனையாளர்களுக்கு போனஸ் தொகை ரூ.1,000 உயர்வு

போனஸ் தொகையை வழங்குவதற்காக ரூ. 26.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில லாட்டரி முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் பண்டிகை போனஸ் தொகையில் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்று கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் அறிவித்துள்ளார்.

கேரள மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசன், தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் கேரள மாநில லாட்டரி முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு போனஸ் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவியேற்ற வி.டி.சதீசன் தலைமையிலான அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போனஸ் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி கேரள மாநில லாட்டரி முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் பண்டிகை போனஸ் தொகையில் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில வரித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, கேரள மாநில லாட்டரி முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல நிதி வாரியத்தின் உறுப்பினர்களுக்கு ஓணம் பண்டிகை போனஸ் தொகையாக ரூ.8,500, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3,750 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ரூ.7,500-ம், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 2,750-ம் போனஸாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகையை வழங்குவதற்காக ரூ. 26.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது நலவாரியத்தின் 26,980 செயல் உறுப்பினர்கள் மற்றும் 9,345 ஓய்வூதியதாரர்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.