தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை எதிரொலி: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

பிரதமர் செல்லும் பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி தமிழகம் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் நாளை தொடங்கி வைக்கிறார். இருவரும் மெட்ரோ ரெயிலில் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். பிரதமரின் இந்த வருகையையொட்டி, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.

வாகன சோதனை

சென்னை முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் செல்லும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகளை செய்ய இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT