தேசிய செய்திகள்

பினாமி சொத்து வழக்கை முடிக்க ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரி அதிகாரி கைது

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுபாஷ் யாதவ்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தென்மும்பை பல்லார்ட் எஸ்டேட் சிந்தியா ஹவுஸ் வளாகத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுபாஷ் யாதவ். இவரிடம் புகார்தாரர் ஒருவர் தனக்கு வந்த பினாமி சொத்து விசாரணை நோட்டீஸ் தொடர்பாக சென்று சந்தித்தார். அப்போது அந்த வழக்கை முடித்து தருவதற்கு அதிகாரி சுபாஷ் யாதவ் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் இது குறித்து சி.பி.ஐ. போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி, புகார்தாரர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று சுபாஷ் யாதவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்ச பணத்தை பெற்ற சுபாஷ் யாதவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபாஷ் யாதவை 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT