புதுடெல்லி,
ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வணிக பயன்பட்டிற்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலிண்டர்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்கிற பீதி பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் பீதி அடைய வேண்டம் என்றும் முன்பதிவு செய்த 3 நாட்களில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரான் போர் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் இந்தியாவின் கச்சா எண்ணை மற்றும் கியாஸ் வினியோகம் பாதுகாப்பாக உள்ளது. இதனால் பொதுமக்கள் எரிபொருள் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காதோ என்று பீதி அடைய தேவையில்லை. பொதுமக்கள் முன்பதிவு செய்த சுமார் 3 நாட்களுக்குள் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதன்மூலம் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை என்பதை பொதுமக்கள் உணரலாம். கச்சா எண்ணை விலை ஏற்றத்தால் செலவு அதிகரித்தாலும் பொதுமக்களின் நலனை பாதுகாக்க அதில் குறிப்பிடத்தக்க செலவை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்காலிக நடவடிக்கையாக கியாஸ் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான குறைந்தபட்ச இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் சிலிண்டர் புக் செய்த 45 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவு ஏற்கப்படும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஹர்முஸ் ஜலசந்தியை தவிர வேறு வழிகள் வழியாக வருகிறது. தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.