தேசிய செய்திகள்

கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மைசூரு,

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் மண்டியா மாவட்டம் கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,274 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது.

கபினி அணை

இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சன ஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,282.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,701 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 11 ஆயிரது 896 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு தற்போது 13,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

இந்த 2 அணைகளில் இருந்தும் திறக்கப்பபட்ட நீர் திருமாகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.