அக்னி - 4 ஏவுகணை 
தேசிய செய்திகள்

இந்தியா மீண்டும் சாதனை: அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

இந்த ஏவுகணை 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் "அக்னி-4 ஏவுகணை" சோதனை வெற்றிபெற்று இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது.

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா மாநிலம் சந்திபூரில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி இந்தியாவின் தற்காப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘அக்னி-3’ நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 6-ந்தேதி மீண்டும் நடந்த ‘அக்னி-4 ஏவுகணை’ சோதனை வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. ராணுவத்தின் மூத்த பிரிவான 'ஸ்டிராட்டஜிக் போர்சஸ் கமாண்ட்' இந்தச் சோதனையை முன்னின்று நடத்தியது.

துல்லியமான இலக்கு

சோதனையின் போது ஏவுகணையானது தனது அனைத்து தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அளவுகோல்களையும் துல்லியமாக எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகச் சரியாகத் தாக்கி அழித்து சாதனை படைத்தது. இந்த ஏவுகணை 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது. 2 நிலைகளைக் கொண்ட திண்ம எரிபொருள் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது.

அதிநவீன தொழில்நுட்பம்

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் மற்றும் நவீன வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டது. இந்த வெற்றிகரமான சோதனை நாட்டின் அணு ஆயுதத் தடுப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.