தேசிய செய்திகள்

கப்பல் மறுசுழற்சி செய்வதில் இந்தியா சாதனை

கப்பல் மறுசுழற்சி என்பதற்கு உலகளாவிய மையம் என்ற இந்தியாவின் நிலையை இது உறுதிபடுத்துவதாகவும் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

கப்பல் மறுசுழற்சி செய்வதில் 2025-ல் உலகின் முதன்மை நாடாக இந்தியா மாறியுள்ளது. உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாடு அண்மைக்கால அறிக்கையின்படி, உலகளாவிய கப்பல் மறுசுழற்சியில் 2024-ல் 30.1 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு 2025-ல் 35.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சாதனை

எடையளவை பொறுத்தவரை 2024-ல் 1.86 மில்லியன் டன் என்பதிலிருந்து சுமார் 60 சதவீதம் அதிகரித்து 2025-ல் 2.99 மில்லியன் டன் ஆகியுள்ளது. இந்த சாதனையையடுத்து கடல்சார் இந்தியா, தொலைநோக்குப் பார்வை 2030 -க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அதற்கு முன்பாகவே எட்டக்கூடும். கடல்சார் கொள்கை சீர்திருத்தங்களின் தாக்கம், பிரதமர் மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் வணிகம் செய்வதை எளிதாக்கும் முன்முயற்சிகள் ஆகியவை இந்த சாதனையில் பிரதிபலிக்கின்றன.

கப்பல் மறுசுழற்சி

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழி பாதைகள் துறை மந்திரி சர்பானந்த சோனாவால், நீடித்த கொள்கை சீர்திருத்தங்களின் வெற்றி, தொழில்துறை முயற்சிகள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். பொறுப்புமிக்க நீடிக்கவல்ல கப்பல் மறுசுழற்சி என்பதற்கு உலகளாவிய மையம் என்ற இந்தியாவின் நிலையை இது உறுதிபடுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முதலிடம்

நிலைத்தன்மை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் துறைசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒருங்கிணைந்த உத்தியின் விளைவாகவே உலகளாவிய கப்பல் மறுசுழற்சியில் இந்தியா முதலிடத்தை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.