தேசிய செய்திகள்

இந்தியா கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது - பாஜக விமர்சனம்

இந்தியா கூட்டணி, தற்போது துண்டு துண்டாக உடைந்து விட்டது என பாஜக கூறியுள்ளது.

புதுடெல்லி,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணி

இந்தநிலையில், இந்தியா கூட்டணியின் நிலைமை குறித்து விமர்சித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது:-

இந்தியா கூட்டணி, தற்போது துண்டு துண்டாக உடைந்து விட்டது. மே 4-ல் இந்தியா கூட்டணி என்ற ஒன்றே இருக்காது என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கணிப்பு உண்மையாகி விட்டது.

இந்தியா கூட்டணி அணி என்பது தற்போது வெறும் பேப்பர்களிலும் தொலைக்காட்சிகளில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், உண்மையாக களத்தில் இல்லை. அது இறந்து புதைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் - திமுக மோதல்

இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக இருந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தன. இது இந்தியா கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, புதிதாக அமைந்த தவெக அரசுக்கு காங்கிரஸ் திடீரென ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியது. காங்கிரஸ் - திமுக மோதல் காரணமாக, டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இந்தியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.