தேசிய செய்திகள்

டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி; துணை ராணுவம், போலீசார் 13 ஆயிரம் பேர் குவிப்பு

பேரணியில், மாணவர்கள், சமூக அமைப்புகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களவை எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

புதுடெல்லி

டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ள சூழலில், போலீசார், துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தடை

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பேரணி

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த பேரணியில், மாணவர்கள், சமூக அமைப்புகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களவை எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

ஜனநாயகமும், அரசியல் சாசனமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பேரணி நடைபெறுகிறது என கூறிய அவர், பேரணியில், சிறு வணிகர்களும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

50 ஆயிரம் பேர்

இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தினரை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்காகவும் 3 ஆயிரம் போலீசாரும், 10 ஆயிரம் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், இதனால் தீபாவளி பண்டிகை வியாபாரம் வெகுவாக பாதிக்கும் என டெல்லி வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த மாதத்தில் 2 முறை கடிதமும் எழுதியுள்ளார். இந்த சூழலில், பேரணியானது இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT