புதுடெல்லி,
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பேரணியில் ஈடுபட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும். வாக்குத் திருட்டு குற்றச் சாட்டை முன்வைத்தும் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு நோக்கிப் பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளனர்.
அதில், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) நிறுத்தவும், ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்த உள்ளனர்.
இது தொடர்பாக சந்திப்புக்கு நேரம் கேட்டு. தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரசார் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து இருப்பதாக கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டங்கள் குறித்து முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
இது ‘சிவ தாண்டவம்', 'சிவபெருமானின் ஊர்வலம்'. இதற்கு எந்தவிதமான முன் திட்டமிடலும் தேவையில்லை. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். யாரையும் தடுக்க முடியாது” என்றார்.