புதுடெல்லி,
2025-ல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி டாப் 4 இடங்களை பிடித்துள்ளன. 5-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது, மொத்த உலக ராணுவ செலவினத்தில் 58%-ஐ இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 1.68 ட்ரில்லியன் டாலர் ஆகும். 2025-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு 2,887 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2025ம் ஆண்டில் 92.1 பில்லியன் டாலர் செலவினத்துடன் உலகின் 5-வது பெரிய ராணுவ செலவு செய்யும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது. உலகளாவிய ராணுவ செலவில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ராணுவ செலவு 8.9% அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ஆயுதப் படைகள் தங்களைப் போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்க அவசரகால அடிப்படையில் பல ஆயுதங்களைக் கொள்முதல் செய்தன. 2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப் பயன்படுத்தப்பட உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பதற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்பு செலவை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 2016-20 மற்றும் 2021-25 காலகட்டங்களுக்கு இடையே 4% குறைத்துள்ளது. இருப்பினும், உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2% பங்களிப்புடன் இந்தியா இன்னும் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக ரஷியாவை சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்து வருகிறது. 2011-15 இல் 70% ஆக இருந்த ரஷியாவின் பங்கு, தற்போது 40% ஆகக் குறைந்துள்ளது. தற்போது பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடுகளாக உருவெடுத்துள்ளன.