புதுடெல்லி,
ஓமன் கடற்கரை அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் (எம்.எஸ்.வி. அல் யூசுஃபி) மீது வான்வழித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கப்பலில் 14 பணியாளர்கள் இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், கந்தர் நஹீம் அஜிஜ் என்கிற குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானதாகத் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஓமன் கடற்கரை அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை தணிக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நேற்று (திங்கள்கிழமை) மாலை ஓமனின் லிமா பகுதிக்கு அருகே 'MSV AL JUSUFI' என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக காயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்ந்துள்ளார்.
இந்த உயிரிழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓமனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன் மீட்கப்பட்ட இந்தியர்களையும் உயிரிழந்தவரின் உடலையும் விரைவில் தாயகத்துக்குக் கொண்டு வர ஓமன் அதிகாரிகளுடன் ஓருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்புவதற்கும் பதற்றத்தைத் தணிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ராஜதந்திர தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மற்றும் பொது மக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, இந்த பிராந்தியத்தின் சர்வதேச நீர்வழிகள் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றம் வணிக நடவடிக்கைகள் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.