தேசிய செய்திகள்

‘இந்தியா தனது உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு

கடற்படை அதிகாரிகளின் பணி இந்திய மக்களின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நேரடியாக பங்களிக்கிறது என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஏழிமலையில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

உலகளாவிய வர்த்தகம்

“கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பு என்பது உலக நாடுகளின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகில் கடல்சார் துறை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் பெரும் பகுதி கடல்கள் வழியாகவே நடைபெறுகிறது.

கப்பல்களின் இயக்கத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும். இறுதியில் சாதாரண குடிமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.

கடலில் நீங்கள் ஆற்றும் சேவையானது இந்திய மக்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பணி இந்திய மக்களின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நேரடியாகப் பங்களிக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்புத் திறன்கள்

இந்தியக் கப்பல் கட்டும் தளங்களில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவதால், இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களையும் சீராக வலுப்படுத்தி வருகிறது. இது, தற்சார்புக்கான நமது உறுதிப்பாட்டையும், நமது பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் மீதான நமது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இந்திய கடற்படை அதிகாரிகளாக, வலிமையான மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருப்பீர்கள். இந்தியா தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதிலும், கடல்சார் திறன்களை மேம்படுத்துவதிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது.

பெண் அதிகாரிகள்

இங்கு நிறைய பெண்கள் இன்று பயிற்சியை நிறைவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். உறுதி, துணிவு மற்றும் திறமைக்கு எல்லைகள் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்கள் சாதனைகள், இன்னும் பல இளம் பெண்களைப் பெரிய கனவுகளைக் காணவும், தேச சேவைக்காக சவால்களையும், பொறுப்புகளையும் ஏற்கவும் ஊக்குவிக்கும்.

பட்டம் பெறும் அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பங்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது. ஒவ்வொரு இளம் அதிகாரிக்குப் பின்னாலும் பல தியாகங்களை செய்து, ஊக்கமளித்து, கடினமான காலங்களில் அவர்களுக்கு பலம் அளித்த ஒரு குடும்பம் இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT