தேசிய செய்திகள்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் கையெழுத்து

இந்த ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய யூனியன் 97 சதவீத வரி வரம்புகளில் தாராளமயமாக்கலை வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

ஒப்பந்தங்களுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பருக்குள் கையெழுத்து

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்ததுக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தன. இதன் பிரமாண்டமான அளவைக் கருத்தில் கொண்டு, இது அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாயாகக் கருதப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு, இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ அம்சங்களை ஆய்வு செய்து வந்தனர்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவு நகல், ஒப்புதலுக்காக ஐரோப்பிய யூனியன் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தடையற்ற ஒப்பந்தம் டிசம்பருக்குள் கையெழுத்தாகி அமலுக்கு வரும் என ஐரோப்பிய யூனியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையர் மரோஸ் செப்கோவிக் கூறுகையில், "இந்த ஒப்பந்தம் கவுன்சிலால் டிசம்பருக்குள் கையெழுத்திடப்பட உள்ளது. பின்னர் அது அங்கீகரிக்கப்பட்டால், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய இரு தரப்பிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது அமையும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு தரப்புக்கும் இடையிலான சந்தை வாய்ப்புகள் மேம்படும்.

சுங்க வரிகள் குறைக்கப்படும், தேவையற்ற வர்த்தக தடைகள் நீக்கப்படும். மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான தெளிவான விதிகள் உருவாக்கப்படும்" என்றார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், உலகளாவிய வர்த்தக அமைப்பின் மீதான அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாகச் செயல்படுத்த ஐரோப்பிய யூனியன் முனைப்பு காட்டி வருகிறது.

இலக்கு

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா 86 சதவீத வரி வரம்புகளில் சலுகைகளை வழங்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன் 97 சதவீத வரி வரம்புகளில் தாராளமயமாக்கலை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 2032-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஏற்றுமதியை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்தியாவிலும் உள்நாட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சரவையின் ஒப்பு தல் மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் அனுமதி பெற்ற பிறகே, இந்தியாவில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இரு தரப்பும் இணைந்து 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளன.

SCROLL FOR NEXT