புதுடெல்லி
பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய இந்த பயணம், வர்த்தகம், முதலீடு மற்றும் முக்கியத்துவம் பெற்ற தொழில் நுட்பம் உள்ளிட்ட பரவலான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த பயணத்திற்காக நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ஸ்டப் கூறும்போது, என்னுடைய இந்திய வருகையானது, பின்லாந்து மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் என கூறினார். இதனை தொடர்ந்து, நேற்று டெல்லி வந்தடைந்த அவரை மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.
அவருடைய இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்நிலையில், பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கூட்டாக நிருபர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவும், பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
எந்தவொரு விவகாரத்திலும் ராணுவ மோதலால் தீர்வு காண கூடாது என நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அது உக்ரைனோ அல்லது மேற்காசியாவோ, மோதல்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அமைதியை நோக்கிய ஒவ்வொரு முயற்சிக்காகவும் தொடர்ந்து நாங்கள் ஆதரவளிப்போம் என பேசினார்.
வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் மட்டுமின்றி அவசரமும் கூட என நாங்கள் ஒப்பு கொள்கிறோம் என்றும் பேசினார்.