புதுடெல்லி,
திடக்கழிவு மேலாண்மை(SWM) விதிகளின் கீழ், மாநகராட்சிகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வி.என்.பட்டி, நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகளிடம், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் செயலாக்கத்தை கண்காணிப்பதற்கான நிர்வாகப் செயல்முறையை தொடங்குதல் மற்றும் நிறுவுதல் ஆகிய 2 கட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்தியா தற்போது ஒரு பணக்கார நாடாக ஆகிவிட்டது. ஆனால் நமது நாட்டில் சுகாதார செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. சிலரின் அலட்சியத்தால் ஏற்படும் எதிர்மறையான தாக்கம், மற்ற துறைகளில் நாம் அடைந்துள்ள வளர்ச்சியை முற்றிலும் பயனற்றதாக்குகிறது.
மோசமான சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை சமூகம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. இந்தியாவைப் போன்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள், தங்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை இலக்குகளில் வெற்றி பெற்ற நிகழ்வுகளும் உள்ளன.
நம்மிடம் உள்ள வளங்களை வைத்து நாமும் அதை சாத்தியமாக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புக் குழு (SCMC) தாக்கல் செய்த அறிக்கைகள் மூலம், அரசு நிர்வாகங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வேலை செய்து வந்திருப்பது தெரியவருகிறது. மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகார வரம்புகளுக்குள் உள்ள அனைத்து திடக்கழிவு உற்பத்தியாளர்களையும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அடையாளம் காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.