தேசிய செய்திகள்

‘இந்தியாவில் அடுத்த 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது’ - மத்திய அரசு

அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கப்பால் போக்குவரத்து தடைபட்டு, சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

உலக அளவில் என்ன நடந்தாலும் ஒவ்வொரு இந்திய கொடி மகனுக்கும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு தேவையான சீரான விநியோகம் உள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், யாராவது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்தினால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.