தேசிய செய்திகள்

21ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு இந்தியா முன்னேற்றம் - பிரதமர் மோடி

உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மாநாட்டைத் தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

புத்தாக்க மாநாடு

அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்காக, முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி, சுகாதாரம், எரிசக்தி, பருவநிலை மற்றும் கடல்சார் அறிவியல் உள்ளிட்ட 12 கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆராய்ச்சி முன்னுரிமைகள், தேசியத் திறன்கள், அறிவியல் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களை நடைமுறைப் பயன்பாடுகளாக மாற்றுவது ஆகியவற்றில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில், உள்நாட்டு அறிவியல் சாதனைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் விதமாக, விரிவான தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

இந்தநிலையில் மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், மக்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை உருவாக்கி வருகிறது. சுகாதாரம், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, பேரிடர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகிறது.

மனித மூளை

மனித மூளையை உயர் தெளிவுத்திறனுடன் முப்பரிமாண டிஜிட்டல் படங்களாக உருவாக்கும் தொழில்நுட்பத் தளம் இம்மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மூளை தொடர்பான பல்வேறு நோய்களின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றை ஆராய்வதற்கான புதிய வழிகளைத் திறக்கவும் இந்த முயற்சி உதவும்.

மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மூளையின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள உதவும் உடலில் அணியக்கூடிய எக்கு தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

தகவல் தொடர்பில் உள்நாட்டுத் தொழில்நுட்பம்!

மூளையின் மின் செயல்பாடுகளைப் பதிவு செய்யும் எக்கு தொழில்நுட்பம், நரம்பியல் ஆராய்ச்சி மற்றும் மூளை தொடர்பான செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுபோன்ற புதிய முயற்சிகள் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

வயர்லெஸ் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கி வருகிறது. தகவல் தொடர்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விவசாயத் துறையை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்கள்

விவசாயத் துறையை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள், குறிப்பிட்ட உணவுத் தேவைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துப் பொருட்கள் எனப் பல்வேறு துறைகளிலும் புதிய தீர்வுகள் உருவாக்கப்படுகின்றன.

மின்னணு சாதனங்கள் முதல் நவீனத் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் வரை பல துறைகளுக்கு அடிப்படையாக விளங்கும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்திலும் இந்திய நிறுவனங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, உள்நாட்டுத் திறன்களை விரிவுபடுத்தும் முயற்சிகளின் முக்கிய பகுதியாக உள்ளது.

இந்தியா முன்னேற்றம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது; அவை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடைமுறைத் தீர்வுகளாகவும் மாற வேண்டும்

உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும்தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின்

இலக்கு. இந்திய இளைஞர்கள் சிந்தனை திறன், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது ஊக்கமளிக்கிறது. 21ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT