ராய்ப்பூர்,
சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, மராட்டியம், மத்தியபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சத்தீஷ்கார் சென்றுள்ளார். அவர் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஒழிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் நவி ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது,
நாடு கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து விரைவில் விடுபட வேண்டும். நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி தோட்டாக்களை பாய்ச்ச அரசு விரும்பவில்லை.
நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க அரசு தயாராக உள்ளது. மாவோயிஸ்டுகள் பிரச்சினையை பொருளாதார வளர்ச்சியின்மை பிரச்சியையாகவோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவோ கருத முடியாது.
இடதுசாரி தீவிரவாதம் என்பது சித்தாந்தத்தால் இயக்கப்படும் சவால். அந்த சித்தாந்தத்தின் உண்மையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கம்யூனிசம் எங்கெல்லாம் ஆட்சியில் உள்ளதோ அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டுவர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் பேரழிவை தரக்கூடியது. அந்த சித்தாந்தத்தில் இருந்து நாடு உடனடியாக விடுபட வேண்டும்.
ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் இடம்பெறவில்லை. திரிபுரா, மேற்கு வங்காளத்தில் கம்யூனிசம் மறைந்துவிட்டது. கேரளாவில் மட்டும் கம்யூனிசம் ஓரளவு உயிர்பிழைத்துள்ளது. ஆனால், கம்யூனிசத்தில் இருந்து விடுபட திருவனந்தபுரத்தில் இருந்து மக்கள் மாற்றத்தி தொடங்கியுள்ளனர்.
என்றார்.