தேசிய செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து இடையே நாளை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - பியூஷ் கோயல்

நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அங்கு வரியின்றி சென்றடைய முடியும் என்று பியூஷ் கோயல் கூறினார்.

ஆக்ரா,

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இதற்காக இந்தியா வந்துள்ள நியூசிலாந்து வர்த்தக மந்திரி டாட் மெக்கிளேவுடன், மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலைப் பார்வையிட்டார்.

அப்போது நிருபர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:-

“மந்திரி மெக்கிளேவுக்கும் எனக்கும் இடையே நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகியோரால் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் நாளை கையெழுத்திடப்பட உள்ளது. இன்னும் சில மாதங்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும். நியூசிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அங்கு வரியின்றி சென்றடைய முடியும்.

ஆக்ராவில் உள்ள தோல் தொழில், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களுக்கு மகத்தான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நியூசிலாந்து மந்திரியும் அவரது மனைவியும் தாஜ்மஹாலைப் பார்க்க விரும்பினர். அவர்கள் இன்று அதைப் பார்வையிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” இவ்வாறு கூறினார்.